லோக் அதாலத்
காஞ்சீபுரத்தில் நடந்த லோக்அதாலத்தை மாவட்ட நீதிபதி சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்ததுடன் பல்வேறு பயனாளிகளுக்கு தீர்வுத் தொகைக்கான உத்தரவு நகலையும் வழங்கினார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் குழுவின் தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 432 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.இதில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 350 தீர்வுத்தொகையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் செந்தில்குமார், சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை லோக்அதாலத் நிர்வாக அலுவலர் அண்ணாமலை செய்திருந்தார். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளையும் மாவட்ட நீதிபதி சந்திரன் நட்டார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் இயங்கி வரும் லோக் அதாலத்தில் குடும்ப வழக்கு, பாகப்பிரிவினை, வழக்கு வாகன விபத்து, நஷ்டஈடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதனை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தொடங்கி வைத்தார், மகிளா நீதிபதி அம்பிகா, பிரதம சார்பு நீதிபதி அனுஷா, தலைமைகுற்றவியல் நீதிபதி பிரியா, குற்றவியல் நடுவர்கள் ரீனா, நவீன் துரைபாபு, கூடுதல் மகிளா நீதிபதி சங்கீதா, மூத்த வக்கீல்கள் வெங்கடேசன், தணிகை வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.