மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் 67 சதவீதம் வாக்குப்பதிவு மே 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

இந்திய நாடாளு மன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

தேசிய அளவில் நேற்று 3-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. இதில் 68.81 சதவீத வாக்குகள் பதிவாயின. ஓட்டுப்பதிவு முடிவடைந்த பிறகு மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தார்வார், ஹாவேரி, பெலகாவி, சிக்கோடி, பீதர், விஜயாப்புரா (தனி), பாகல்கோட்டை, கொப்பல், கலபுரகி (தனி), ராய்ச்சூர் (தனி), தாவணகெரே, உத்தர கன்னடா, பல்லாரி (தனி), சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக பெலகாவி தொகுதியில் மட்டும் 57 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில் முக்கியமாக கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா மல்லிகார்ஜுன கார்கே, அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ், உத்தர கன்னடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வி.எஸ்.உக்ரப்பா எம்.பி., தார்வாரில் பா.ஜனதா சார்பில் பிரகலாத்ஜோஷி எம்.பி., அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி, பீதர் தொகுதியில்காங்கிரஸ் சார்பில் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே எம்.எல்.ஏ., சிவமொக்காவில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா எம்.பி., அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மதுபங்காரப்பா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர்.

அவர்கள் மட்டுமின்றி, ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களும் வாக்கு சேகரித்தனர்.

அந்த 14 தொகுதிகளில் மொத்தம் 2 கோடியே 43 லட்சத்து 3 ஆயிரத்து 279 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 22 லட்சத்து 55 ஆயிரத்து 590 பேரும், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரத்து 667 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2,022 பேரும் உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 28 ஆயிரத்து 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 5 ஆயிரத்து 605 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தலையொட்டி வட கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கியதும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் வாக்களிப்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினர். முதல் முறை வாக்காளர்களும் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகளும் வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதுபோல் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு வாகன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. 14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது