மாவட்ட செய்திகள்

முதுமலையில் 2-வது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

முதுமலை வனப்பகுதியில் 2-வது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ காரணமாக புலிகள் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தினத்தந்தி

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. மசினகுடி-தெப்பக்காடு சாலையோரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பலத்த காற்று வீசியதால் மள மளவென அருகிலுள்ள மண்ராடியர் வனப்பகுதிக்கு பரவியது. பின்னர் முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் மாரியப்பன், சிவக்குமார், தயாநந்தன், காந்தன், செல்வம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுத்தீயின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

இதற்கிடையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதிக்கும் தீ பரவியது. இதனால் வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்தனர். இருப்பினும் காட்டுத்தீயை அணைக்க தொடர்ந்து போராடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட காட்டுத்தீ இரவு, பகலாக தொடர்ந்து நேற்றும் எரிந்தது. இதுவரை நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வரை காட்டுத்தீ பரவியது. உடனடியாக வனத்துறை ஊழியர்கள் அங்கு பற்றிய தீயை அணைத்தனர். மேலும் வனப்பகுதியை ஒட்டி கட்டி வைக்கப்பட்டு இருந்த யானைகளும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. முகாமை சுற்றியுள்ள வனப்பகுதி முழுவதும் எரிந்ததால், இனிவரும் நாட்களில் வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மசினகுடி வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய தேக்கு மரங்கள் மற்றும் உண்ணி செடிகள் அதிகளவில் உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அடுத்தடுத்த வனப்பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவி வருவதால், முதுமலை புலிகள் காப்பக பகுதி கரும்புகை மூட்டத்துடன் காட்சி அளிக்கிறது.

முதுமலை புலிகள் காப்பக சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம், மாவனல்லா வனப்பகுதியிலும் நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் சிங்காரா வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். வனப்பகுதியில் பற்றிய தீ பலத்த காற்று காரணமாக குரும்பர் பள்ளம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியின் அருகில் வரை பரவியது. உடனே ஆதிவாசி மக்கள் தண்ணீர் ஊற்றியும், மரத்தின் கிளைகளை வெட்டி போட்டும் காட்டுத்தீயை அணைத்தனர். மேலும் வனத்துறை ஊழியர்களுக்கு உதவியாக கூடலூர் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு பொக்காபுரம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அணைக் கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2-வது நாளாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் தீ எரியும் வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம்பெயர தொடங்கி விட்டன.

மேலும் நேற்று மதியம் முதல் முதுமலை புலிகள் காப்பகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த வாகன சவாரியும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா கூறும்போது, காட்டுத்தீ தொடர்ந்து எரிவதால் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. காட்டுத்தீ அபாயம் நீங்கிய பிறகு ஆலோசிக்கப்பட்டு புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்படும் என்றார். இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் தீ வைப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை-பொள்ளாச்சி சாலையோரத்தில் அய்யர்பாடி எஸ்டேட் அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதுகுறித்து வால்பாறை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அய்யர்பாடி எஸ்டேட் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும் 2 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. இதற்கிடையே வால்பாறை வனச்சரகர் சக்திகணேஷ் உத்தரவின்பேரில் காட்டுத்தீ காப்பு காடுகளுக்கு பரவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு