மாவட்ட செய்திகள்

3-வதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்: பெண் சிசுவை எரித்து கொன்ற தம்பதி

3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் அந்த பெண் சிசுவை எரித்துக் கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

தினத்தந்தி

செங்கம்,

செங்கம் அருகே 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் சிசுவை எரித்துக் கொன்ற கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக கலெக்டர் நேரில் விசாரணை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பாய்ச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வேண்டா. இவருக்கு கடந்த 24-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து அவரது மனைவிக்கு கருத்தடை செய்வது குறித்து சிவக்குமாரிடம் டாக்டர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளாமலும், டாக்டர்களிடம் தெரிவிக்காமலும் 26-ந் தேதி மாலை சிவக்குமார், அவரது மனைவி வேண்டா இருவரும் குழந்தையுடன் பாய்ச்சலில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர். இதுகுறித்து கலெக்டருக்கு மருத்துவக்கல்லூரி டீன் தகவல் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பாய்ச்சல் கிராம செவிலியர் சிவக்குமாரிடம் சென்று குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும், குழந்தையை தனது நிலத்திற்கு கொண்டு சென்று எரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். பெண் சிசு இறப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கிராம செவிலியர் கூறினார். அதன்பேரில் பாய்ச்சல் போலீஸ் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து சிவக்குமாரை இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிவக்குமார் மற்றும் அவரது மனைவி வேண்டா தம்பதிக்கு ஏற்கனவே திவ்யா (வயது 9), அர்ச்சனா (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அவர் கூலி வேலை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சிவக்குமாரிடமும் அவரது மனைவி வேண்டாவிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரேணுகா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது. பெண் சிசு கொலைகள் தடுப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் சராசரி குறைந்து வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்தது முதல் 6 வயது வரை இறப்பு அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு கொலையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செங்கம் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை