மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் அதன் முழுகொள்ளளவை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளன. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்குமேல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 648 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 33 ஆயிரத்து 569 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட, அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 84.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 87.10 அடியாக உயர்ந்துள்ளது.
அதாவது, ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.