மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் இருந்து 400 தொழிலாளர்கள் கொல்லிமலை திரும்பினர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுரை

கர்நாடகாவில் இருந்து திரும்பிய கொல்லிமலை தொழிலாளர்கள் 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பிறகும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுரை வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த 400 தொழிலாளர்கள் கர்நாடக மாநிலம், சிக்கமகளூர் மாவட்டத்தில் மிளகு பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்கள் அனைவரும் கர்நாடக மாநில அரசு பஸ்கள் மூலமாக நேற்று சேந்தமங்கலம் வந்தடைந்தனர்.

இவர்களில் 100 பேர் கொல்லிமலை அரசு மாதிரி பள்ளியிலும், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேந்தமங்கலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தலா 150 நபர்களும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார். மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

பின்னர் இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் நாள் ஒன்றுக்கு 3 முறை கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கடைகளுக்கும், பிற இடங்களுக்கும் செல்லும்போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். நீங்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பிறகும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை சேர்ந்த வயதானவர்கள், குழந்தைகளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இந்த முகாமில் வழங்கப்பட்டு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபராதம்

பின்னர் அவர் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காசாலை மற்றும் உழவர்சந்தை பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சென்று போலீசாரிடம் வாகன சோதனையில் பிடிபட்ட 150-க்கும் மேற்பட்ட நபர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முககவசம் அணிவது குறித்தும், விபத்து ஏற்பட்டால் உயிர்பலி ஏற்படாமல் இருக்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிவதால் கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக அறிவுரைகள் கூறினார்.

இதையடுத்து முககவசம் அணியாமல் வந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.100 வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்த நிகழ்வுகளில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ் உள்பட சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு