மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. இந்த புலிகள் குறித்தும், அவற்றுக்கு தேவையான உணவு, வாழ்விடம் போதுமானதாக உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு, கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட கணக்கெடுப்பு பணி புலிகள் காப்பகத்தின் பப்பர்ஜோன் எனப்படும் வெளிமண்டல பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து கோர்ஜோன் எனப்படும் மைய பகுதியில் தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பப்பர் ஜோன் பகுதியில் உள்ள சிங்காரா, சீகூர், தெங்குமராஹாடா ஆகிய 3 வனபகுதிகளில் உள்ள புலிகளை நவீன தானியங்கி கேமராக்கள் கொண்டு கணக் கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் புலிகள் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தானியங்கி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்திலும் தானாக இயங்கக்கூடிய இந்த கேமராக்கள் புலிகள் நடந்து செல்லும் பாதைகளில் இருபுறமும் பொருத்தபடுகின்றன.
சுமார் 204 இடங்களில் ஒரு இடத்திற்கு 2 நவீன தானியங்கி கேமரா வீதம் 408 கேமராக்கள் பொருத்தபட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் பொருத்தப்படும் கேமராக்கள் 30 நாட்கள் அதே இடத்தில் இருக்கும். இந்த கேமராக்களில் பதிவாகும் தகவல்கள் மட்டும் வாரத்திற்கு ஒரு முறை சேகரிக்கபடும்.
30 நாட்கள் முடிந்ததும் இந்த கேமராக்கள் கழற்றபட்டு வேறு வனப்பகுதியில் பொருத்தப்படும். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளை வனத்துறை ஊழியர்கள் நேரடியாக பார்க்க முடியாது என்பதால் இது போன்று நவீன கேமராக்கள் கொண்டு கண்காணித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கேமராக்கள் மூலம் புலிகள் குறித்தும், புலி குட்டிகள் குறித்தும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.