மாவட்ட செய்திகள்

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 5 கிலோ தங்க நகைகள் சிக்கின

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

மும்பையில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு வரும் ரெயிலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக திருவனந்தபுரம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மெரின் ஜோசப் உத்தரவின் பேரில் ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே பாறைசாலை ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் நின்றனர். அந்த ரெயில், பாறைசாலை நிலையத்துக்கு வந்ததும் அதில் ஏறி அதிரடி சோதனை நடத்தினார்கள். பயணிகள் மட்டுமின்றி, அவர்களின் உடைமைகளையும் சோதனையிட்டனர். இதனால் ரெயிலிலும், பாறைசாலை ரெயில் நிலையத்திலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் பெட்டி ஒன்றில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருந்த இருக்கையின் அடியில் பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளை திறந்து போலீசார் சோதனையிட்ட போது, அவற்றில் பதுக்கி வைத்திருந்த தங்க வளையல், சங்கிலிகள் என 5 கிலோ தங்கநகைகள் சிக்கின.

இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நகைகளுக்கான ஆவணங்கள் உள்ளதா? என அந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அந்த நகைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

தங்கநகைகளை கடத்தி வந்த 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஸ்தாபன்குமார் (வயது30), பவன் லம்பா (28) என்பதும், நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குவதற்காக அந்த நகைகளை மும்பையில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக ரெயில்வே போலீசாருக்கும், சரக்கு, சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் உள்ள எந்த நகை கடைக்கு நகைகள் கடத்தி வரப்பட்டன, இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு