ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார். இதில், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் ராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, அணைப்பாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 32 தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சந்திரசேகரபுரம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அமைச்சர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, இதுவரை சமூகநலத்துறை மூலம் 5 லட்சம் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு சிறப்பு பள்ளிகள், அரசு மறுவாழ்வு முதியோர், குழந்தைகள் ஆகிய இல்லங்களில் சமூகநலன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தற்காப்பு வசதிகளை ஏற்படுத்தி உணவு வசதிகளும் செய்துள்ளன. அங்கன்வாடியின் கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று சத்துமாவு, முட்டை உள்ளிட்ட சத்துணவு பொருட்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணியாளர்கள் வழங்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் ஊராட்சி தலைவர் வேம்புசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் வி.மணி வேம்புசேகரன், பரமேஸ்வரி கோபால், சந்திரசேகரபுரம் ஊராட்சி தலைவர் பழனிவேல், முருங்கப்பட்டி ஊராட்சி தலைவி சென்னம்மாள், ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. இணை செயலாளர் பி.குமார், சந்திரசேகரபுரம் ஊராட்சி துணைத்தலைவர் முத்துசாமி, நெடுஞ்செழியன், நடேசன், முத்து, பட்டணம் மதி, தொட்டிப்பட்டி சின்னதுரை, சி.எஸ்.புரம் மாரிமுத்து, சாந்தப்பன், பாஷா, போடிநாயக்கன்பட்டி குப்புராஜு, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.