நாமக்கல்,
நாமக்கல்-திருச்சி சாலை இந்திரா நகரில் வசித்து வருபவர் பொற்கோ (வயது 56). தொழில் அதிபர். இவர் நாமக்கல்லில் டயர் ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி இவர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு தந்தையின் நினைவு நாளில் சாமி கும்பிட குடும்பத்தினருடன் சென்றார்.
பின்னர் வீடு திரும்பியபோது பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கப்போர்டில் பையில் வைத்திருந்த ரூ.12 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்த திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அமுதா (வயது 50) என்ற பெண் உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மோகனூரை சேர்ந்த வெங்கடாசலம் (32), சரண்குமார் (30), பரமத்தி விக்னேஷ் (32), நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேசன் (35), விருத்தாசலம் கணேஷ் (23) ஆகிய 5 பேர் மற்றும் அமுதா என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொற்கோ வீட்டில் திருட்டு போனதில் ரூ.11 லட்சத்தை போலீசார் மீட்டனர். இதற்கிடையே இந்த கும்பல் நாமக்கல்- சேலம் சாலை முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே கருப்பசாமி என்பவரின் மனைவி வசந்தியிடம் நகையை மிரட்டி பறிக்க முயன்று இருப்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
தொடர்ந்து அவர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவர்கள் 6 பேருக்கும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.