மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்ல பஸ் வசதி கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

ஆம்பூர் அருகே பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டது. இதனை வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள ஈச்சம்பட்டு மூப்பர் காலனி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பிரபுதாஸ் மலர்வேந்தன் என்பவர் வந்தார். அவரது முயற்சியால் படிப்படியாக மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து தற்போது 133 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 3 ஆசிரியர் பணியிடம் உள்ளது. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என கருதி பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து 4 ஆசிரியைகளை நியமித்து அவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய பஸ் வாங்கப்பட்டது

தற்போது அந்த பள்ளிக்கு சின்னபள்ளிகுப்பம், மேல்குப்பம், இலங்கை அகதிகள் முகாம் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ - மாணவிகள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது.

இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் மலர்வேந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு பஸ்சை வாங்கி அதில் தினந்தோறும் காலை, மாலை என இருவேளையிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கிராம பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தலைமை ஆசிரியர் ஒன்றிணைந்து ரூ.3 லட்சம் திரட்டி பஸ்சை வாங்கி உள்ளனர். மீதித்தொகை மாதந்தோறும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழா

பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வாங்கப்பட்ட பஸ்சை மாணவர்கள் பயன்படுத்தி கொள்வதற்கான தொடக்க விழா பள்ளியில் நடந்தது.

விழாவுக்கு தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் மலர்வேந்தன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, தமிழ்ச்செல்வி, கோவிந்தராஜ், கிராம கல்விக்குழு தலைவர் பரமதயாளன், மேலாண்மை குழு தலைவர் வினோதா தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் லதா கலந்துகொண்டு, பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ஆம்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் குணசேகரன் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைகுழுவினர், ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்