பிரம்மதேசம்,
பிரம்மதேசம் அருகே உள்ள பழமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் துர்காதேவி (வயது 17). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய சகோதரர் சபரி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து துர்காதேவி மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துர்காதேவி தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் தீக்காயமடைந்து வலியால் அலறி துடித்தார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்காதேவி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தாய் நளினி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சகோதரர் உயிரிழந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட துர்காதேவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.