கரூர்,
நடிகை ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை ஜோதிகா பேசிய ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் அந்த வசனத்தை பேசிய நடிகை ஜோதிகா மீதும், படத்தின் இயக்குனர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2-ல் மாஜிஸ்திரேட் பாக்கியத்திடம் கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பாண்டியன், வக்கீல் தமிழ் ராஜேந்திரன் மூலம் நேற்று ஒரு மனுதாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கை தொடர்ந்துள்ள பாண்டியன், இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளராக உள்ளார். வழக்கு தொடர்பாக அவர் கூறுகையில், பெண்ணை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு பெண்ணே வசனம் பேசியது கண்டிக்கத்தக்கது. படம் வெளிவருவதற்கு முன்பே இந்த வசனத்தை வெளியிட்டு படத்திற்கு இயக்குனர் பாலா விளம்பரம் தேடியுள்ளார். இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 294 (பி) பிரிவின் படியும், தகவல் தொழில்நுட்பம் சட்டம் 2005-ல் 67-வது பிரிவின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.