மாவட்ட செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நிரம்பியது உபரிநீர் முழுவதும் வெளியேற்றம்

கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து, அதில் இருந்து உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தாமதம்

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. பொதுப்பணித்துறை விதிகளின்படி அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை பவானிசாகர் அணையில் 102 அடி உயரத்துக்குத்தான் தண்ணீரை தேக்கிவைக்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தால் அது அப்படியே உபரிநீராக வெளியேற்ற வேண்டும். ஆனால் நவம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து அணையில் அதன் முழு கொள்ளளவான 105 அடிக்கு தண்ணீரை தேக்கிவைக்கலாம்.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும், அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் உபரிநீராக திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து 105 அடி வரை தண்ணீரை சேமிக்கலாம் என்பதால் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 104 அடியை கடந்த 2-ந் தேதி தொட்டது. எனினும் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

40 ஆண்டுகளுக்கு பிறகு...

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அணையில் இருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு அதன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக திறந்துவிடப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 107 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து அந்த தண்ணீர் அப்படியே மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை அணையின் உதவி பொறியாளர் சிங்காரவடிவேலு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்