சென்னை,
தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தொடர்பான மாணவர் சந்திப்பு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் அரசியல் கட்சி சாராத மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை உருவாக்கவேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கருத்தரங்குகள்-கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும், துண்டு அறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசிடம் வலியுறுத்தி, தமிழக அரசு நிறைவேற்றவேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கல்லூரிகள் முன்பு வாயில் கூட்டம் நடத்தப்படும். மேலும் தொடர் கருத்தரங்கமும் நடத்தப்படும். பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பாக பெரிய அளவிலான போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவதற்காக மாணவர் அமைப்பினர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளோம். நீட் தேர்வில் இருந்து குறைந்தபட்சம் தமிழகத்துக்கு விலக்கு அல்லது அகில இந்திய அளவில் விலக்கு கிடைக்கும் வரையிலும் அறவழியில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.