இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை கடப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று மதியம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட நெய்தாளபுரம் மலைக்கிராமத்தில் இருந்து 2 பேர் மோட்டார்சைக்கிளில் தாளவாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சிக்கள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது யானைகள் கூட்டமாக அந்த வனச்சாலை பகுதிக்கு வந்தது. மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை கண்டதும் யானைகள் ஆவேசம் அடைந்து துரத்த தொடங்கின. உடனே அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றனர்.
அப்போது அங்குள்ள வேகத்தடையில் திடீரென மோட்டார்சைக்கிள் நின்று விட்டது. இதற்கிடையே யானைகள் அவர்களை நெருங்கி வந்தது. இதனால் பயந்து போன 2 பேரும் மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினர். சிறிது நேரத்துக்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை யானைகள் துரத்திய சம்பவத்தால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.