மாவட்ட செய்திகள்

பெலகாவியில் அமித்ஷா வருகையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

பெலகாவியில் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அரை நிர்வாணமாக விவசாயிகள் உருளுசேவை நடத்தியதால் பரபரப்பு உண்டானது.

தினத்தந்தி

பெங்களூரு,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். நேற்று அவர், பெலகாவியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக நேற்று காலையில் பெலகாவிக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெலகாவி டவுனில் உள்ள சென்னம்மா சர்க்கிள் பகுதியில் திரண்டு இருந்த விவசாயிகள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷமிட்டனர். மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் சென்னம்மா சர்க்கிளில் இருந்து பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் பேரணி சென்றார்கள். இதில், எராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு சென்னம்மா சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவகத்திற்கு சென்ற விவசாயிகள் சிலர் அரை நிர்வாணமாக உருளுசேவை நடத்தினார்கள். மேலும் சாலை மறியலிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் சமாதானமாக பேசினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். அமித்ஷாவுக்கு எதிராக தொடர் கோஷங்களை எழுப்பியதுடன், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான விவசாயிகளை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்களை அங்கிருந்து வேனில் அழைத்து சென்றார்கள். அதன்பிறகு, மாலையில் கைதான விவசாயிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அமித்ஷாவின் வருகையை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு