மாவட்ட செய்திகள்

அமராவதி ஆறு- வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

கரூரில் உள்ள அமராவதி ஆறு மற்றும் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது விவசாயி கவுண்டம்பட்டி சுப்ரமணியம் பேசுகையில், கவுண்டம்பட்டி உள்பட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் மக்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்படுகிற ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் நிலை எப்படி உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்து மழைநீரை சேகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

தெற்கு சின்னதேவன்பட்டியை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி தங்கவேல் பேசுகையில், அரவக்குறிச்சி, கடவூர், கரூர் உள்ளிட்ட இடங்களில் நீர்பிடிப்பு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே தடுப்பணை கட்டி விட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

அமராவதி நதிநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன்பெற கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தினை ஒருங்கிணைத்து ஒரு தனி அதிகாரியை நியமித்து அதிகாரம் வழங்க வேண்டும். இதன்மூலம் 10 ஆண்டுகால பிரச்சினையாக உள்ள விவசாயிகளின் பாசன தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என விவசாய சங்க நிர்வாகி கோயம்பள்ளி ரத்தினவேலு பேசினார்.

ஈச்சநத்தத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில், ஈச்சநத்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓடை, வரத்து வாய்க்கால் உள்ளிட்டவற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் பக்கவாட்டில் மண்ணைபோட்டு நிரப்பி பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் மழை பெய்கிற போது அந்த தடுப்பணை சேதம் அடைய வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயப்பட்டறைகளால் பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் உள்பட விவசாயிகள் பேசுகையில், திருமாநிலையூர் ராஜவாய்க்கால், அமரவாதி ஆறு, வாங்கல் வாய்க்கால் உள்பட நீர்நிலைகளில் சாயப்பட்டறை கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் நீராதாரங்கள் மாசடைவதோடு விவசாய கிணறுகளில் நீரின் தரம் கெடுகிறது. இது குறித்து பல முறை மனு அளித்தபோதும், சாயக்கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதாகவும், சாயப்பட்டறைகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே மாவட்ட கலெக்டராகிய நீங்கள் நேரடியாக சாயக்கழிவுநீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தங்கள் பகுதி நீர்நிலையில் தேங்கி கிடந்த சாயக்கழிவுநீரை பாட்டிலில் எடுத்து வந்து கலெக்டரிடம் காண்பித்தனர்.

உடனே கலெக்டர் அறிவுறுத்துதலின் பேரில் இந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்து பேசியபோது கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிக்கையில், அவர் கூறுகிற இடத்தில் எல்லாம் சாக்கடை தண்ணீர் தான் செல்கிறது. கரூரில் ஆண்டாங்கோவில், கருப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாயப்பட்டறைகளுக்கு நேரில் சென்று கழிவுநீர் முறையாக வெளியேறுகிறதா? என கண்காணித்து கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறோம். இதேபோல் கழிவுநீரை மறைமுகமாக வெளியேற்றிய 4 பட்டறைகளுக்கு மின் இணைப்பை துண்டிப்பது, பொருட்களை பறிமுதல் செய்வது என நடவடிக்கை எடுத்து தான் வருகிறோம் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட கலெக்டர் இரவு நேரத்தில் திடீரென சோதனை மேற்கொண்டு சாயக்கழிவுநீர் வெளியேறுவதை கண்காணித்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூட்டத்தில் பேசுகையில், ஏரி-குளம் உள்பட நீர்நிலைகளை மேம்படுத்தும் பொருட்டு விவசாய தேவைகளுக்காக வண்டல் மண் அள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். சிலர் கூடுதலாக மண்ணை வெட்டி எடுத்து சென்று வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்டவற்றின் மூலம் ஆங்காங்கே வரத்து வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு