லஞ்ச ஒழிப்பு சோதனை
தீபாவளி வசூல் வேட்டையை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று இரவிலும் நீடித்தது.
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது சோதனை முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
சார் பதிவாளர் அலுவலகம்
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார் பதிவாளர்கள் சுமதி, உமாசங்கரி மற்றும் இணை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரத்து 140-ஐ பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக-ஆந்திர எல்லைக்கான நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியின் ஒரு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாய் தயாள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.26 ஆயிரத்து 700 கைப்பற்றப்பட்டது. சென்னையில் 4 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் பஞ்சாயத்து தலைவர் ஒருவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.