தேனி,
போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில், கடந்த மாதம் 11-ந்தேதி காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. இதில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீஸ் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதில், நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் போலீசாரின் பணி மகத்தானது. படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் உயிரை துச்சமாய் நினைத்து பணியாற்றினர். இந்தநிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், 4 சப்- இன்ஸ்பெக்டர்கள், 41 ஆயுதப்படை போலீஸ் ஏட்டுகள், 12 நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், 182 பயிற்சி போலீசார் என மொத்தம் 240 பேருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆயுதப்படை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.