ஆரணி,
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை போதிமரம் என்ற தொண்டு நிறுவனம் தற்போது நிர்வகித்து வருகிறது.
அறக்கட்டளை சார்பாக வசூலிக்கும் தொகையில் 20 சதவீத தொகையை ஆரணி நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு. ஆனால் வசூலிக்கும் தொகையில் வெறும் 100 ரூபாய் மட்டுமே நகராட்சிக்கு தனியார் தொண்டு நிறுவனம் செலுத்தி வந்தது.
அதுவும் இந்த கட்டணத்தை பல வருடங்களாக தொண்டு நிறுவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தினமும் 10-க்கும் மேற்பட்ட பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு பிணம் எரிப்பதற்கு ரூ.4 ஆயிரத்து 200 வசூலிப்பதாக கட்டணம் நிர்ணயித்து ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் ஆரணி நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடையில் தற்போது ஒரு பிணத்தை எரிக்க ரூ.2 ஆயிரம் கட்டணம் என நிர்ணயம் செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கலெக்டரின் நடவடிக்கைக்கு புகார் அளித்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.