கம்பம்,
மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரிய வகை மரங்களும், யானை, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, மரஅணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை மூலிகை செடிகளும் உள்ளன. தற்போது வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது.
இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து வருகின்றன. செடி, கொடிகள் கருகி உள்ளன. அதன்படி மேகமலை வன உயிரின சரணாலயம், கம்பம் கிழக்கு வனச்சரகத்துக்குட்பட்ட சுருளிப்பட்டி (காப்புகாடு), நாராயணத்தேவன்பட்டி, யானை கெஜம், சண்முகா நதி, சுருளி அருவி பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிகிறது.
தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள விலை உயர்ந்த மரங்கள் கருகி வருகின்றன. செடி, கொடிகள் தீக்கிரையாகி கொண்டிருக்கின்றன. வனவிலங்குகள் இடம் பெயர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த வண்ணம் உள்ளன.
அதேநேரத்தில் தீத்தடுப்பு நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதாவது, வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க பள்ளம் தோண்டியும், மரக்கிளைகளை வெட்டி போட்டும் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசம் கிடையாது.
மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கு குதிரைக்கொம்பாக உள்ளது. ஏனெனில் தீயை அணைப்பதற்கான நவீன உபகரணங்கள் வனத்துறையினரிடம் இல்லை. எனவே காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
எனவே தீயை அணைப்பதற்கு நவீன உபகரணங்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.