ராசிபுரம்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). நிதி நிறுவன ஊழியரான இவர் கடந்த 2009 ஜூன் 15-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து நாமக்கல் சென்றார். ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் எம்.ஜி.ஆர்.காலனி அருகே சென்றபோது அவருக்கு பின்னால் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசுபஸ் அவர் மீது மோதியது. இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையொட்டி விபத்து இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2009 ஜூலை 15-ந் தேதி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் மீது கருப்பசாமியின் மனைவி முத்துலட்சுமி (42) மற்றும் அவரது 2 மகன்கள் வக்கீல் வாசுதேவன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி, கடந்த 2011 ஜூன் 28-ந் தேதி ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 64-ஐ இழப்பீட்டு தொகையாக வழங்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால் கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் முத்துலட்சுமி மேல்முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டு, சார்பு நீதிமன்றத்தில் விதித்த ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 64-ஐ வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனாலும் அரசு போக்குவரத்து கழகம் தொகையை வழங்கவில்லை. இதையொட்டி கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் முத்துலட்சுமி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
அதன்பேரில் தற்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன் வட்டியுடன் ரூ.17 லட்சத்து 62 ஆயிரத்து 976-ஐ வழங்கவேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீட்டு தொகையை வழங்காததால் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில், நேற்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த, கொல்லிமலையில் இருந்து சேலம் செல்வதற்காக ராசிபுரம் பஸ் நிலையம் வந்த அந்த பஸ்சை ராசிபுரம் சார்பு நீதிமன்ற ஊழியர் வெங்கடாசலம் ஜப்தி செய்தார். இதையொட்டி பஸ்சில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
நாமகிரிபேட்டையைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி செல்வராஜ் (40). இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தண்ணீர்பந்தல்காடு என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த அரசுபஸ் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையொட்டி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் செல்வராஜின் மனைவி பாலாமணி (40) மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு போக்குவரத்துக் கழகம் மீது விபத்து இழப்பீட்டு தொகை வழங்கும்படி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி, ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 434-ஐ இழப்பீட்டு தொகையாக வழங்கும்படி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் தொகையை வழங்காததால் சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன் உத்தரவின்பேரில், நேற்று ராசிபுரம் பஸ் நிலையத்தில் ராசிபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையைசேர்ந்த டவுன் பஸ்சை சார்பு நீதிமன்ற ஊழியர் வெங்கடாசலம் ஜப்தி செய்தார். காளிப்பட்டியில் இருந்து ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தபோது அந்த டவுன் பஸ்சை ஜப்தி செய்தது குறிப்பிடத்தக்கது. ஜப்தி செய்யப்பட்ட 2 அரசு பஸ்களும் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரேநாளில் ராசிபுரம் பஸ் நிலையத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.