சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. சேலம் சன்னியாசிகுண்டு ஊராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர், மீரான் சாகிப் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். அதன்பேரில் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். மற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம், மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், அந்த வாலிபரிடம் சென்று படம் எடுக்க வேண்டாம் என்றும், எடுத்ததை அழித்து விடுமாறும் கூறினார். அதை கேட்க மறுத்ததால் அவரிடம் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்போனை வாங்கினார். எனவே செல்போனை கேட்டு பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உங்களை அழைத்து வந்தவரிடம் இந்த செல்போனை ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தார்.
ஆனால் அதை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் மனு கொடுக்க உள்ளே சென்றவர்களும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலுக்கு திரும்பி வந்தனர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சிலர் வேகமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை வெளியேற்றி நுழைவு வாயில்களை அடைத்தனர். தள்ளுமுள்ளுவில் சில பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டதால் குடிநீருக்காக மக்கள் அவதியுற்று வருகிறோம். பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே கலெக்டர், எங்கள் பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.