மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்து மர்ம கும்பல் தாக்குதல் 12 பேர் காயம்

வீட்டில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கோவாட் கிராமம், கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பீம்சேன் சவான் என்பவரது வீட்டில் சமீப காலமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் குறிப்பிட்ட மதத்தினரின் பிரார்த்தனை கூட்டம் நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வழக்கம் போல பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வாள், இரும்புக்கம்பி மற்றும் கண்ணாடி பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிள்களில் 25 பேர் வந்தனர்.

முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பயங்கர தாக்குதலில் இறங்கினர்.

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே அவர்கள் அந்த வீட்டை அடித்து நொறுக்க முற்பட்டனர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட சில பெண்கள் தைரியமாக வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து மர்ம நபர்கள் மீது வீசி எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவத்தால் பிரார்த்தனை கூட்டம் நடந்த வீடு போர்க்களம் போல காட்சி அளித்தது.

இதற்கிடையே மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பிரார்த்தனை கூட்டத்துக்கு இடையூறு செய்யும் நோக்கத்திலேயே இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்தது. தாக்குதல் நடத்திய கும்பல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்