மாவட்ட செய்திகள்

தலைஞாயிறு அருகே வயலில் தனியார் பஸ் கவிழ்ந்தது 30 பெண்கள் உள்பட 41 பேர் காயம்

தலைஞாயிறு அருகே வயலில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பெண்கள் உள்பட 41 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வாய்மேடு,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருவாரூரை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாரூர் மாவட்டம் வேல்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவர் ஓட்டி சென்றார். திருவாரூர் காட்டாத்துக்குளம் பகுதியை சேர்ந்த ராஜா (33) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ்சில் 48 பயணிகள் இருந்தனர்.

தலைஞாயிறு அருகே ஆலங்குடி என்ற ஊரில் சென்ற போது எதிரே வந்த வாகனத்துக்கு பஸ் டிரைவர் வழிவிட முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பஸ்சில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

41 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த எட்டுக்குடியை சேர்ந்த உஷா (42), மன்னார்குடி வடபாதி பகுதியை சேர்ந்த மனோன்மணி (50), புஷ்பவனம் பகுதியை சேர்ந்த விக்டோரியா மேரி (40), அவுரிகாட்டை சேர்ந்த சாரதாம்பாள் (75), தலைஞாயிறை சேர்ந்த சிலியன்தேவி (21), வேட்டைகாரனிருப்பை சேர்ந்த எழிலரசி (39) என 30 பெண்கள் உள்பட 41 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தலைஞாயிறு தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர் பாரதி தலைமையில் 7 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

விசாரணை

விபத்தில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் ரமேஷ் அருகில் உள்ள கீழையூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது