மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் ‘ஸ்மார்ட்’ கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது

மெரினா கடற்கரையில் ‘ஸ்மார்ட்’ கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்தும் விதமாக அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்தது. மேலும் அங்கு மாநகராட்சியால் வழங்கப்படும் ஸ்மார்ட் வண்டி கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏற்கனவே அங்கு கடைகளை வைத்திருந்த, மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்ட கடைக்காரர்களுக்கு 60 சதவீதம் அதாவது 540 கடைகளும், மெரினாவில் கடை நடத்தாத வெளியாட்களுக்கு 40 சதவீதம் அதாவது 360 கடைகளும் ஒதுக்கப்பட்டது.

அதற்காக 14 ஆயிரத்து 322 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் இருந்து 900 பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. குலுக்கல் நடைபெற்ற போதே, மெரினாவில் ஏற்கனவே கடை வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கே கடை ஒதுக்கக்கோரியும், குலுக்கல் முறையில் வெளியாட்களுக்கு கடை ஒதுக்குவதை கண்டித்தும் மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இதை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் நேற்று காலை 8 மணியளவில், முதல் கட்டமாக 50-க்கும் மேற்ப்பட்ட கடைகளை மெரினா கடற்கரையில் இறக்கி மாநகராட்சி ஊழியர்கள் வரிசைப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது மெரினா கடற்கரையில் ஏற்கனவே கடை வைத்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மெரினா போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி சார்பில் இங்கு இறக்கப்பட்ட கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அதுவரை போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மெரினா போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு