பூந்தமல்லி,
கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகவும், வெளியூர்களுக்கு பஸ்களில் கஞ்சா கடத்தப்படுவதாகவும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்தன.
இந்த தகவலையடுத்து, கோயம்பேடு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அங்கு தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையம் 2-வது நடைமேடை அருகே சந்தேகத்திற்கிடமாக பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கைப்பற்றி போலீஸ் நிலையம் எடுத்துச் சென்ற போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, அதில் சுமார் 16 கிலோ எடையை கொண்ட கஞ்சா இருப்பது உறுதியானது.
பஸ்நிலையத்தில் கஞ்சா பையை விட்டுச் சென்ற மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் கெடுபிடிக்கு பயந்து கஞ்சா பையை அங்கேயே விட்டுச் சென்றார்களா? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.