மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் பெற்ற குழந்தையை அனாதையாக விட்டு சென்ற தாய்

பெற்ற குழந்தையை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய் அனாதையாக விட்டுச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அடுக்கம்பாறை,

வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருமணமாகாத பெண் ஒருவர் பிரசவத்துக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு கடந்த 22-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் தனது குழந்தையுடன் அங்கு 5 நாட்கள் இருந்துள்ளார். ஆனால் குழந்தைக்கு அவர் தாய்ப்பால் புகட்டவில்லை. பின்னர் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மாயமானார்.

அவர் மருத்துவமனையில் கொடுத்த முகவரியை கொண்டு ஆரம்ப கால மருத்துவ சேவைகளை வழங்கிய எஸ்.வி.நகரம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் தாயை கண்டறிந்து எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு குழந்தையையும் தாயையும் கடந்த 27-ந் தேதி அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் மீண்டும் அந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு மாயமானார். இதனையடுத்து அந்த பெண்ணை தேடி அவர் கொடுத்த முகவரிக்கு டாக்டர்கள் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. டாக்டர் ஏமநாத் குழந்தையை பரிசோதித்தபோது, ஒரு வாரமாக தாய்ப்பால் சரிவர கொடுக்கப்படாததால் குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார்.

ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்வையிட்டு மாவட்ட சமூகநல அலுவலருக்கும், மாவட்ட தொட்டில் குழந்தை திட்ட அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் இருந்து 108 அவசர ஆம்புலன்சில் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் போலீசார் குழந்தையை அனாதையாக மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாயை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது