சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்கு போராடி வரும் நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கும் இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைப் பிரிவு திறக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான மருத்துவ வாய்ப்புகளை முடக்கி வைத்து, அவர்களில் பலரின் உயிரிழப்புக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி காரணமாக இருக்கக் கூடாது. உடனடியாக முடவியல் தொகுதியை கொரோனா சிறப்பு மருத்துவப் பிரிவாக அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் வழங்கப்படுவதையும், அவசரத் தேவைகளுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.