சிப்காட் (ராணிப்பேட்டை),
வேலூர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு மற்றும் கல்வி மன்றக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. ஆட்சி மன்றக்குழுவில் உள்ள 2 உறுப்பினர் பதவிகளுக்கு 3 பேரும், கல்வி மன்ற குழுவில் உள்ள 10 உறுப்பினர் பதவிகளுக்கு 19 பேரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 126 கல்லூரிகளில் உள்ள 1,900 ஆசிரியர்களும், 42 முதல்வர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த தேர்தலில் பல்கலைக்கழகத்தின் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை வாக்குசீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் பதிவுத்தபாலில் அல்லது பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தாங்கள் வாக்களித்த சீட்டுகளை நேற்று முன்தினம் மாலை 4 மணிக்குள் சேர்க்க வேண்டும். இதற்கான வாக்கு எண்ணிக்கை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறை தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் முன்னாள் பொருளியல் துறை தலைவர் வீரமணி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிடும் ஒருதரப்பை சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகன் வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி காலை நடைபெறும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த முதல்வர்கள், பேராசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.