விஷம் குடித்தனர்
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 38). இவருடைய மனைவி ராசி (36). இவர்களுக்கு ஜீவனா (12) என்ற மகள் உள்ளார். ராசி, நேற்று முன்தினம் நள்ளிரவு தாங்கள் 3 பேரும் விஷம் குடித்து விட்டதாக தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பினார்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், 3 பேரையும் வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடன் தொல்லை
விசாரணையில் ராசி, அந்த பகுதியில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு, மாதாந்திர சீட்டுகளை நடத்தி வந்தார். அவரிடம் வேலை செய்த விருகம்பாக்கத்தை சேர்ந்த மோகனபிரியன் (28) என்பவர் தனியாக பிரிந்து தீபாவளி மற்றும் நகை சீட்டு நடத்தி வந்தார். அவருக்கு ராசியும் தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களை சேர்த்துவிட்டதுடன், ரூ.90 லட்சம் வரை மோகனபிரியனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர் பணத்தை முறையாக கொடுக்கவில்லை என்றும், இதனால் அவரிடம் சீட்டுக்கு சேர்ந்தவர்கள் ராசிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், இதனால் அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் கடன் ஏற்பட்டதாலும் விரக்தியில் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.