மாவட்ட செய்திகள்

பாம்பாறு அணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலி செல்பி எடுக்க முயன்ற போது பரிதாபம்

ஊத்தங்கரை அருகே செல்பி எடுக்க முயன்ற போது பாம்பாறு அணையில் மூழ்கி திருமணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் பலியானார்கள்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியை அடுத்து அமைந்துள்ளது ஒட்டப்பட்டி என்ற கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள்கள் கனிதா (வயது 19), சினேகா (18), மகன் சந்தோஷ் (14). இவர்களில் கனிதா, சினேகா ஆகியோர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தனர். சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிவேதா (20). இவர் இளங்கோவின் அக்காள் மகள் ஆவார். இவருக்கும் பர்கூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரபு - நிவேதா தம்பதியினர் நேற்று ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க சென்றனர். அவர்களுடன் கனிதா, சினேகா, சந்தோஷ் ஆகியோரும், உறவினர் யுவராணி என்பவரும் சென்றனர். 6 பேரும் சினிமா பார்த்து விட்டு நேற்று மாலை மாரம்பட்டி வழியாக பாம்பாறு அணை பக்கமாக வந்தனர்.

இதையொட்டி அவர்கள் அணை அருகில் நின்று புகைப்படம் எடுக்க முடிவு செய்தனர். கனிதா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்று கொண்டு அவர்களுடன் தனது செல்போன் மூலம் செல்பி எடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் நின்று கொண்டிருந்த கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டார்.

மேலும், அவர் யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

இது குறித்து அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதே போல ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த, கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவர்களின் உடல்களை கண்டு பிரபு, யுவராணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்