கடலூர்,
ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் கடந்த 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் உள்ள டாக்டர்கள் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிநோயாளிகள் பிரிவு அனைத்து மருத்துவமனைகளிலும் மூடப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. இதன் காரணமாக மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளுக்கு வந்த வெளிநோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டதாக இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கேசவன் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், நவீன ஆங்கில மருத்துவ முறையும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி இந்திய மருத்துவ சங்க தலைமை நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என்றார்.