மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மலைவாழ் மக்கள் சுரண்டப்படுகிறார்கள்

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மலைவாழ் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று நீதிபதி கூறினார்.

தினத்தந்தி

துறையூர்,

துறையூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பச்சமலையில் உள்ள செம்புளிச்சாம்பட்டி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான ராஜலிங்கம் தலைமை தாங்கினார். துறையூர் வக்கீல்கள் சங்க துணை தலைவர் விவேக்ராஜா, முன்னாள் அரசு வக்கீல்கள் ராமசாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மும்மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது;-

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மலைவாழ் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யார் சொன்னாலும் அதனை அப்படியே நம்பியிருக்க கூடாது. தகுதியுடையவர்கள் உரிய பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் பழங்குடியினர்(எஸ்.டி) பிரிவுக்கான காலிப்பணியிடங்கள் தகுதியுடைய மலைவாழ் மக்கள் இல்லாததால் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு வேலை பெற உங்களுக்கான சாதி சான்றும், கல்வி தகுதியும் அவசியம். சாதி சான்று உடனடியாக கிடைக்கவில்லை என்று நீங்கள் கூறுவதால், வருவாய் துறையினருடன் இணைந்து கட்டாயமாக இன்னொரு முறை சட்ட விழிப்புணர்வு முகாம் பச்சமலையில் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி ராஜலிங்கம் பேசுகையில், மலைவாழ் மக்கள் அரசின் திட்டங்களை பெற போதிய விழிப்புணர்வு அவசியம். அதற்கு கல்வியறிவு தேவை. ஆண், பெண் பாகுபாடின்றி தங்களின் அனைத்துக் குழந்தைகளுக்கும் உயர் கல்வி அளிக்க மலைவாழ் பெற்றோர்கள் தயாராக வேண்டும். கல்வி தான் ஒரு குழந்தைக்கு பெற்றோர் அளிக்கும் மிக சிறந்த சொத்தாகும். சிறுசிறு சச்சரவுகளைத் தவிர்த்து மலைவாழ் மக்கள் இணக்கமாக வாழ வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியவில்லை என்றால் அரசு செலவில் வக்கீல் நியமித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உரிய தீர்வு காணப்படும், என்று கூறினார்.

கூட்டத்தில் குற்றவியல் நடுவர் வடிவேல், வக்கீல்கள் ரத்தினம், ரெங்கசாமி, ராமமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். வக்கீல்கள் ராஜசேகரன், சசிக்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் சட்ட உதவி கோரி பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக துறையூர் வக்கீல் சங்க செயலாளர் செல்லதுரை வரவேற்றார். முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர்(பொறுப்பு) சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது