மாவட்ட செய்திகள்

தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர்கேட்டு கிராம மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர்கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி போஜாநாயக்கன்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் வறட்சியின் காரணமாக ஆழ்துளைகிணற்றில் குடிநீர் குறைந்தது.

இதனால் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிராமமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து கழுகூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் அந்த குடி நீரும் உப்புத்தன்மை அதிகமாக இருந்ததால் அதனை கிராம மக்களால் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தோகைமலை ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த போஜாநாயக்கன்பட்டி கிராமமக்கள் குடிநீர்கேட்டு நேற்று காலை காலிக்குடங்களுடன் வந்து, தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள குளித்தலை-மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம், ஊராட்சிமன்ற செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது