மாவட்ட செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் படுத்து உருண்டு விவசாயிகள் மறியல்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் படுத்து உருண்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கூடினார்கள். பின்னர் அவர்கள் திடீர் என சாலையில் படுத்து உருண்டு மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ஆண் விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் இருந்தனர். பெண் விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் இருந்து கலெக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்த போர்டிகோ வரை அவர்கள் தரையில் படுத்து உருண்ட படியே சென்றனர்.

அப்போது அவர்கள் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும், விவசாயிகளின் டிராக்டர் உள்ளிட்ட சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர்.

போராட்ட முடிவில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில் தமிழகமே வறட்சியில் சிக்கி தவிக்கும்போது வேலூர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியது இல்லை. எனவே அந்த தேர்தலை உடனடியாக நிறுத்தவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்றார். பின்னர் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் கொடுத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு