பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மதிப்பீடு முகாம் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
இதைத்தொடர்ந்து இயற்கை மரண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என 30 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 5 பேருக்கு காய்கறி விதைகளையும் அமைச்சர்கள் தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.
மேலும் இந்த முகாமில் டாக்டர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகின்றார்கள். அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் மணி, தனித்துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் மற்றும் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்கள் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அமைச்சர்கள் தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் பெற்றனர். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் 35 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் அமைச்சர்கள் வழங்கினர். இந்த முகாம்களில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், குமாரபாளையம் நகர வங்கி தலைவர் நாகராஜ், தாசில்தார் தங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.