பெங்களூரு,
மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், ரூ.600 கோடி கருப்பு பணத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு ஹவாலா மூலம் அனுப்பியதாக பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறது. இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு நான் கருப்பு பணத்தை ஹவாலா மூலம் கொடுத்ததாக பா.ஜனதா டெல்லியில் குற்றம்சாட்டியுள்ளது. இது முற்றிலும் தவறானது. நான் கடந்த ஆண்டு(2017) குஜராத் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவில் தங்க வைத்திருந்தேன். அவர்கள் கட்சி மாறுவதை தடுக்கும் வகையில் இங்கே தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கு பழி தீர்க்கும் விதமாக எனது வீடு, அலுவலகங்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 82 இடங்களில் வருமான வரி சோதனையை மத்திய அரசு நடத்தியது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
இந்த சோதனை நடந்து ஓராண்டுக்கு பிறகு அமலாக்கத்துறை என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. எதற்காக இந்த ஓராண்டு காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது?. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைவதை நான் தடுத்தேன்.
இதற்காக என் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் கோழை அல்ல. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என்னை சிறையில் அடைத்துவிட்டால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் கருதுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெறாது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.
நான் எந்த தவறும் செய்யவில்லை. கொலை செய்யவில்லை, கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடவில்லை. நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். எனக்கு விவசாய நிலங்கள் உள்ளன. அதில் இருந்து எனக்கு வருமானம் கிடைக்கிறது. எனது வீட்டில் வைத்திருந்த பணத்திற்கு என்னிடம் முறையான கணக்கு உள்ளது.
ஆனால் விசாரணை அமைப்பினர், எனது நண்பர்களை மிரட்டி, துன்புறுத்தி, அவர்களிடம் எனக்கு எதிராக வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொய்யானது.
நான் இந்த மண்ணின் சட்டத்தை மதித்து நடப்பவன். விசாரணை அமைப்புகள் அழைத்தபோதெல்லாம் நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தேன். ஆனாலும் அவர்கள் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். தேவை இல்லாமல் தொல்லை கொடுக்கிறார்கள்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா காசோலை மூலம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றார். வருமான வரித்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எங்கள் கட்சி தலைவர்களின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் எனது குறிப்பேட்டில் அவர்களின் பெயர் இருந்ததாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுத்ததால், எனக்கு எதிராக ஒட்டுமொத்த பா.ஜனதாவினரும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். வருமான வரித்துறை உள்பட மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா எனக்கு எதிராக தவறாக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் தவறு செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்கையில் என்னை எப்படி கைது செய்ய முடியும்?. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன். பா.ஜனதாவினர் செய்த தவறுகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை நான் நேரம் வரும்போது வெளியிடுவேன்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தனர். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்.
விசாரணையை கண்டு நான் ஓடி ஒளிய மாட்டேன். சட்டம் பற்றி எனக்கும் தெரியும். என்னை பா.ஜனதாவினர் மிரட்ட முயற்சி செய்கிறார்கள். நான் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.