மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.86½ லட்சம் தென்மண்டல ஐ.ஜி. முருகன் வழங்கினார்

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.86½ லட்சம் நிதி உதவியை தென்மண்டல ஐ.ஜி. முருகன் வழங்கினார்.

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி துரைமுத்துவை கடந்த மாதம் 18-ந்தேதி தனிப்படை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி துரைமுத்து திடீரென்று போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார். இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் இறந்தார். வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் உயிரிழந்தார்.

இதையடுத்து போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தென்மண்டல போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாரின் பங்களிப்பில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு வழங்குவதற்காக ரூ.86 லட்சத்து 50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. தொடர்ந்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் நேற்று ஏரல் அருகே பண்டாரவிளையில் உள்ள போலீஸ்காரர் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.86 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ்காரர் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தது காவல் துறைக்கு பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. அவரது இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில், தென்மண்டல போலீஸ் சரகத்தில் பணியாற்றும் காவலர் முதல் காவல் துறை தலைவர் வரையிலும், அவர்களது விருப்பத்துடன் வழங்கிய நிதி மொத்தம் ரூ.86 லட்சம் சேகரிக்கப்பட்டு, போலீஸ்காரர் சுப்பிரமணியனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இன்று (நேற்று) மாத கடைசி நாள். அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுகின்ற நாள். இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணியாற்றிய சுப்பிரமணியன் மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார். அவரது இழப்பு கொடுமையான விஷயம் ஆகும். அவரது குடும்பத்தினருக்கு போதிய நிதி வசதி இருக்காது. இதனை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரத்து 420 வட்டி கிடைக்கின்ற வகையில், அவர்களது பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ.86 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளது.

போலீஸ்காரர் சுப்பிரமணியன் மறைந்தாலும், அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அனைத்து உதவிகளும் செய்யப்படும். தென்மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்