மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வீசி படுகொலை: போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார்

வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தினத்தந்தி

ஏரல்,

வல்லநாடு அருகே மணக்கரையில் கடந்த 18-ந் தேதி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை போலீசார் பிடிக்க சென்றனர்.

அப்போது துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசியதில் சுப்பிரமணியன் என்ற காவலர் உயிரிழந்தார். இதையடுத்து அரசு மரியாதையுடன் சுப்பிரமணியன் உடல் பண்டாரவிளையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, போலீஸ்காரர் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றார். அங்கு சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டுகளை ரவுடிகள் வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இது அவரது குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் மொத்த காவல் துறைக்கே பெரிய இழப்பாகும். அரசு அறிவித்த நிவாரணம் மற்றும் அரசு வேலை முறைப்படி விரைவில் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஏரல் தாசில்தார் அற்புதமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர்கள் பெருங்குளம் வேதமாணிக்கம், ஏரல் ஆத்திப்பழம், பெருங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பண்டாரவிளை பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு