தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:- பருவமழை பெய்யாததால் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. எனவே தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.
ஏற்கனவே ஏற்பட்ட வறட்சியின்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை. அந்த நிவாரணதொகையையும் வழங்க வேண்டும். மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்தியை பெருக்க நுண்ணூட்ட கலவையை கட்டாயமாக விற்பனை செய்யும் போக்கை கைவிட வேண்டும்.அந்த நுண்ணூட்ட கலவையை இலவசமாக வழங்க வேண்டும். தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக கியாஸ் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை வசூலிக்க ரவுடிகளையும், குண்டர்களையும் அனுப்பி மிரட்டும் போக்கு உள்ளது. இத்தகைய மிரட்டலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
மாவட்டத்தில் சில இடங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தில் கலப்படம் இருப்பதாக கூட்டத்தில் மத்திப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் மற்றும் சிலர் தெரிவித்தனர். இதுதொடர்பான மாதிரியையும் காண்பித்தனர். கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசுகையில், ஏரிகளில் மண் எடுக்க அரசு விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண்ணை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளை மிரட்ட ரவுடிகளையும், குண்டர்களையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இவ்வாறு மிரட்டலில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தில் கலப்படம் இருப்பதாக வந்துள்ள புகார்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கவிதா, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரேணுகா உள்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.