மாவட்ட செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு தான் பொறுப்பு ‘உலக வங்கியிடம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு உதவுங்கள்’ சிவசேனா வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்பதால் உலக வங்கியிடம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கடந்த மார்ச் 13-ந் தேதி நாட்டில் சுகாதார நெருக்கடி நிலை எதுவும் இல்லை என தெரிவித்தார். ஆனால் மார்ச் 22-ந் தேதி பிரதமர் ஒருநாள் முழு ஊரடங்கை (மக்கள் ஊரடங்கு) அறிவித்தார். மார்ச் 24-ந் தேதி அன்று 21 நாள் முழு ஊரடங்கை அறிவித்தார்.

அன்று தொடங்கிய குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் இன்றுவரை நீடிக்கிறது.

மத்திய அரசின் கருவூல வருவாயில் குறைந்தபட்சம் 22 சதவீதம் மும்பையில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை.

மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மேலும் ரூ.14.4 லட்சம் கோடி இழப்பை சந்தித்து உள்ளன.

இதற்கிடையே ஊரடங்கு சமயத்தில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை அறிவித்தது. ஆனால் இந்த பணம் எங்கே போனது என்பது மாயமாக உள்ளது.

கொரோனா பரவல் மற்றும் அதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை சமாளிக்க பல மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்திற்கு பாரபட்சமின்றி உதவி கிடைத்தது. இது மத்திய அரசின் பொறுப்பு. சிவசேனா ஆளும் மராட்டிய அரசு தங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்கான ரூ.23 ஆயிரம் கோடியை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கிடையே இந்த மாதத்தில் இருந்து மத்திய அரசு கொரோனா மருத்துவ உபகரணங்கள் வினியோகத்தை நிறுத்தியது. இதன் காரணமாக மராட்டியத்துக்கு மேலும் ரூ.300 கோடி நிதி சுமை ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா ஊரடங்கில் கையாண்ட மோசமான விதம் காரணமாக இன்று நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசே பொறுப்பு. எனவே உலக வங்கியிடம் கடன் பெற்று மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு