மாவட்ட செய்திகள்

தோகைமலை அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியில் உள்ள கல்லடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தநிலையில் காலை 8.10 மணிக்கு கல்லடை கிராமத்தில் இருந்து கல்லடை கைகாட்டி, கீழவெளியூர், காவல்காரன்பட்டி, ஆர்டிமலை வழியாக திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் வந்து செல்கிறது. இந்த பஸ்சில் கீழவெளியூர், காவல்காரன்பட்டி, ஆர்டிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் காலை 8.10 மணிக்கு வரும் அரசு டவுன்பஸ் கடந்த ஒரு மாதகாலமாகவே எந்தவித அறிவிப்பும் இல்லாமல் காலை 9.30-க்கு மேல் கல்லடைக்கு வந்து சென்றுள்ளது. இதனால் கல்லடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் அனைவரும் அவதி வந்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.

இதேபோல் நேற்றும் காலை 9.30 மணிக்கு அரசு டவுன்பஸ் கல்லடைக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாமதமாக வந்த அரசு டவுன் பஸ் முன்பாக அமர்ந்து அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி லால்குடி கிளை மேலாளர் மோகன், கல்லடை கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் மற்றும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கீழவெளியூர் பகுதியில் இருந்து காலை 8.25 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் ஒரு தனியார் டவுன் பஸ் ஊழியர்கள், கல்லடையில் இருந்து செல்லும் அரசு டவுன்பஸ்சை குறித்த நேரத்திற்கு இயக்கவிடாமல் பிரச்சினை செய்து வருவதால், தனியார் டவுன் பஸ்சுக்கு சாதகமாக நடந்துகொண்டு காலை 8.10 மணிக்கு வரும் அரசு டவுன்பஸ், காலை 9.30 மணிக்கு கல்லடைக்கு வந்து செல்கிறது என்று குற்றம் சாட்டினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு