திருச்சி,
திருச்சி காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பவானி, ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் குமாரபாளையம், மோகனூர், பரமத்திவேலூர் வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைகிறது. மேலும் பவானி சாகர் அணையில் இருந்து காவிரியில் 55 ஆயிரம் கன அடியும், அமராவதியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் இணைகிறது. ஆக மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கன அடிவீதம் மாயனூர் கதவணையை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது.
திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 67 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அதன் கிளை வாய்க்கால்களிலும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருச்சி உத்தமர்சீலி தரைப்பாலத்தில் கடந்த 4 நாட்களாக காவிரி தண்ணீர் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டம் தண்ணீரில் மிதக்கிறது. மேலும், அப்பகுதியில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் காவிரி தண்ணீர், அங்குள்ள மாந்தோப்புகள் மற்றும் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தது. அப்பகுதி விவசாயிகள் பொக்லைன் எந்திரம் மூலம் காவிரி தண்ணீர் உள்ளே புகாதவாறு கரையை பலப்படுத்தும் வகையில் மணல்மூட்டைகளை அடுக்கி வைத்தனர். ஆனாலும், அதையும் மீறி காவிரி தண்ணீர் உள்ளே புகுந்தது. இதில் வாழைத்தோட்டத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்கிறது.
மேலும் காவிரி நீர் அப்பகுதியில் உள்ள ஸ்ரீராம் பகுதிக்குள் புகுந்ததால், அங்குள்ள தெருக்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காவிரி ஆற்றில் இன்னும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
காவிரி ஆறு அம்மாமண்டபம் படித்துறையில் மேல் படியை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. அமலா ஆசிரமம், தோப்பு பகுதியிலும் வெள்ளம் புகுந்து அங்குள்ள வாழைத்தோட்டத்தை மூழ்கடித்துள்ளது. அம்பேத்கர் நகர் டிரைனேஜ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு தெருக்களில் தண்ணீர் புகுந்தது. மணல் அரிப்பை தடுக்கும் வகையில், அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இதுபோல திருச்சி குட முருட்டி, கம்பரசம்பேட்டை பகுதிகளில் காவிரி தண்ணீர் அதிகளவில் செல்வதால், குட முருட்டி வாய்க்கால் நிரம்பி வழிகிறது. லிங்கநகர் மற்றும் வி.ஐ.பி. நகர்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர்சீலியில் இருந்து கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு வரை செல்லும் சாலை சற்று தாழ்வாக இருப்பதால், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்த சாலையின் மீது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இந்த தண்ணீரில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடிதான் சென்று வந்தனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் போலீசார் உத்தமர்சீலி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு வைத்து கல்லணை வரை அனைத்து வாகன போக்குவரத்தையும் தடை செய்துள்ளனர். இதன் காரணமாக கல்லணை செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லணையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதேவேளையில் அதிகாரிகள் தரப்பில், கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விட தற்போது குறைவுதான். ஏனென்றால், அந்த காலக்கட்டத்தில் காவிரி வெள்ளம் ஒருபுறம், கனத்தை மழை ஒருபுறம் என திருச்சி மக்களை அச்சமடையை செய்தது. ஆனால், திருச்சியில் தற்போது மழை பெய்யாத காரணத்தால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை என்றும், போதிய போர்க்கால தடுப்பு நடவடிக்கைகளை அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் காவிரி கரையோர மக்களை, பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கர் நாடகாவில் மழை பெய்வது நின்றால்தான், காவிரியில் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.