கரூர்,
பா.ம.க. சார்பில் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அந்தவகையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திற்கு நேற்று மதியம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
காவிரி ஆற்றை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறோம். நாளை (அதாவது இன்று) பூம்புகாரில் பொதுக்கூட்டத்துடன் பயணம் முடிவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் சாயக்கழிவுகள் உள்பட இதர கழிவுகள் கலக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கர்நாடகத்தின் மேகதாதுவில், காவிரியில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். ஏற்கனவே கர்நாடகாவில் தமிழகத்தின் அனுமதி பெறாமல் 4 அணைகளை கட்டியுள்ளனர். தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் இடங்களில் ஓரிரு தடுப்பணைகள் மட்டுமே கட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு முன்னதாக காவிரி ஆற்றில் ஒரு அணை கட்ட வேண்டும். அங்கிருந்து கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோரம் 80 கிலோ மீட்டர் தூரம் இருபுறமும் சுவர் எழுப்ப வேண்டும். இதன் மூலம் 5 டி.எம்.சி. முதல் 7 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும். காவிரி பாயும் மாவட்டங்களை பாதுகாக்க, அப்பகுதியை காவிரி வேளாண் மண்டலமாக அமைக்க சட்டம் இயற்ற வேண்டும்.
குட்கா விற்பனையில் லஞ்சம் வாங்கியதாக அமைச்சரின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா ஊழலை விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவினர் தனிப்படை அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணை தேவை. சி.பி.ஐ. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.