கொண்டலாம்பட்டி,
இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 24). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் தனது சக தோழியின் திருமணத்தில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சேலத்துக்கு திரும்பிய அவர், இளம்பிள்ளை செல்வதற்காக கந்தம்பட்டி பைபாஸ் சாலைக்கு வந்தார். அங்கிருந்து இளம்பிள்ளைக்கு பஸ்சில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் பஸ் திருமலைகிரி பகுதியில் சென்ற போது, மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பறித்து விட்டார். இதனிடையே தனது நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாலதி சம்பவம் குறித்து, கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.