மும்பை,
மும்பையை சேர்ந்தவர் இந்தி நடிகர் பிரசாந்த் நாராயண்(வயது50). இவரது மனைவி சோனா. பிரசாந்த் நாராயண் இந்தி மற்றும் மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தாமஸ் பனிக்கர் என்பவரது தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் பிரசாந்த் நாராயண் நடித்து இருந்தார். அப்போது, மும்பையில் தனது மாமனார் நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி தாமஸ் பனிக்கரிடம் இருந்து பிரசாந்த் நாராயணும், அவரது மனைவி சோனாவும் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தாமஸ் பனிக்கர் கேரள போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கேரள போலீசார் மும்பை வந்து பிரசாந்த் நாராயண், சோனா இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக கேரள மாநிலம் தலசேரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு இருவரையும் வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கணவர், மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.