செங்கல்பட்டு,
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பள்ளி வாகனங்கள் தகுதியுடன் உள்ளதா? என்பது குறித்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.) நடராஜன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் கருப்பையா, ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு நடத்தி சான்று அளிக்கும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கான அவசர வழி உள்ளதா? ஓட்டுனர் உரிமம், முதல் உதவிப்பெட்டி, தீ தடுப்பு கருவி போன்றவை இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி நேற்று முதல் தொடங்கியது.
இதில் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், வண்டலூர், திருக்கழுக்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 372 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் முறையாக பராமரிக்காத 4 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து சரகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் குறைபாடற்ற வாகனங்களுக்கு மட்டுமே உரியச்சான்று அளிக்கப்படும்.
தரமற்ற தகுதியற்ற வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்படும். வாகனங்களின் டயர்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் கண்காணிக்கப்படும். எனவே தகுதியான வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல அந்தந்த பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.