திருப்போரூர்,
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 24). பிரபல ரவுடியான இவர், முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவியை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக 2வது மனைவியுடன் வசித்துவந்தார். வீரமணி மீது கண்ணகி நகர், சேலையூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ஒரு மாதமாக கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம், அங்காளம்மன் கோவில் 5வது தெருவில் 2வது மனைவியுடன் ஒரு குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வீரமணி வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை தட்டி அவரிடம் கஞ்சா கேட்டனர். இதனால் வீரமணி அருகே காலி இடத்தில் பதுக்கிவைத்திருந்த கஞ்சாவை எடுக்க சென்றார்.
அவருடன் சென்ற அந்த கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரமணியை சரமாரியாக வெட்டியது. இதில் காயம் அடைந்த வீரமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து வீரமணி இறந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது.
இதைப் பார்த்ததும் ஓடிவந்த வீரமணி மனைவி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலை வழிப்பறி, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் பல்வேறு வாகனங்களில் ஏராளமான மர்ம நபர்கள் வந்துசெல்கின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் பார் தகராறு, கஞ்சா தொழில் போட்டி, மது போதை தகராறு ஆகிய காரணங்களால் இதுவரை 5க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றனர்.